இலங்கை

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

Published

on

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு சுமார் பத்தாயிரம் மருந்தாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது நாடளாவிய ரீதியில் ஆறாயிரம் மருந்தாளுநர்கள் மாத்திரமே உள்ளனர்.

இந்நிலையில், மருந்தக உரிமையாளர்கள் ஒரு மருந்தாளுநரிடம் பதிவுசெய்து, பயிற்சி பெற்ற மருந்தாளுநர்களுடன் சேர்ந்து மருந்தகங்கள் மூலம் தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.

இருப்பினும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை அவசர தீர்மானமொன்றை எடுத்து வருடாந்த உரிமம் புதுப்பித்தலின் போது மருந்தாளுநர்கள் இல்லை எனக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு 5ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மருந்தாளுநர்கள் பற்றாக்குறை இருந்த போதிலும், தேவை பூர்த்தியாகும் வரை உரிமங்களை புதுப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கிடையில், மருத்துவ அதிகாரிகளால் மருந்தகங்களை ஆய்வு செய்யும் அல்லது உரிமங்களை பரிந்துரைக்கும் திட்டத்தை ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version