இலங்கை

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Published

on

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த(Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று(07.11.2024) இடம்பெற்ற விசாரணையின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களை நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த மாதம் 31ஆம் திகதியும் அவரது மனைவி கடந்த 4ஆம் திகதியும் கைது செய்யப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நவம்பர் 2ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

லொஹான் ரத்வத்தவிற்கு அங்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், நவம்பர் 3 ஆம் திகதி லொஹான் ரத்வத்த திடீர் நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், பின்னர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்தார்.

இதேவேளை, வாகன சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கங்கொடவில நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவையும் இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version