இலங்கை
கடவுச்சீட்டுக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க வாய்ப்பு – இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு
கடவுச்சீட்டுக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க வாய்ப்பு – இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு
கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது கட்டுபாட்டாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு திகதியை முன்பதிவு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன்களையே வழங்க முடியும். ஆனால் அந்த டோக்கன்கள் முடிந்த பிறகு, திகதிக்கும் முன்பதிவு செய்ய முடியும்.
அதற்கமைய, இந்த இணையதளத்தின் மூலம் எந்த நபருக்கும் நாளின் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் திகதியை பதிவு செய்யலாம். இந்த நடைமுறை எதிர்வரும் 6ஆம் திகதி செயற்படுத்தப்படவுள்ளது.
எனவே, திகதியை முன்பதிவு செய்வதற்காக ஆறாம் திகதியின் பின்னர் குடிவரவு அலுவலகத்தில் எவரும் வரவேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையில் நவம்பர் இறுதி வரையான காலப்பகுதிக்கு திகதிகள் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒரு திகதியை முன்பதிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் அவசர தேவைகளை தவிர கடவுச்சீட்டு பெற வருவதை தவிர்க்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் வழமையான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெறப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மொத்தம் 750,000 கடவுச்சீட்டுகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவை பகுதி பகுதியாக பெறப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டு கடவுச்சீட்டு விலை மனுக்கோரல் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய கணக்காய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.