இலங்கை
17முறை மக்களால் நிராகரிக்கப்பட்டவரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ள மாட்டேன்: ஹரிணி பகிரங்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் (Ranil Wickremesinghe) போன்ற ஒருவரிடமிருந்து ஒருபோதும் ஆலோசனையை பெற்று கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ரணில் விக்கிரமசிங்க 17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவரிடம் தாம் ஆலோசனையை எதிர்பார்க்கவில்லை.
அரசியலமைப்பின் அடிப்படையான, மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ளாத ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பைக் கற்பிக்க முன்வந்தது ஒரு பெரிய நகைச்சுவை.
எனவே, தாம் ஒருபோதும் ரணிலிடமிருந்து ஆலோசனையை பெற்று கொள்ளப்போவதில்லை. அவர் 17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டும் இன்னும் அரசியலில் இருந்து வெளியேறவில்லை, இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறார். மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
முடிவுகளை எடுக்கும் போது சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். முடிவுகள் சரியாக எடுக்கப்படாமை காரணமாகவே, நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டது.
மக்களின் கருத்துக்களை கேட்பதன் மூலமும் அதிகாரிகளின் கருத்துக்களைக் கருத்தில் கொள்வதன் மூலமும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதனை விடுத்து முன்னர் உள்ளவர்களை போன்றே தாமும் நடந்துக்கொண்டால், நாளை மக்கள் தம்மை வெளியேற்றுவார்கள்.
ஆகவே, தாம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பதில் கூற வேண்டியதில்லை. மக்களுக்கே பதில் கூற கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.