இலங்கை
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் மாற்றமா!
தேசிய மக்கள் சக்தி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிக்கப் போவதாக அளித்த வாக்குறுதியை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் முன்வைக்கப்பட்டுள்ளது.
2022 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கில் பேசுவதற்கு, தேசிய மக்கள் சக்தி, தம்மை அழைத்ததை எம்.ஏ.சுமந்திரன் நினைவு கூர்ந்துள்ளார்.
எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யத் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி, இப்போது கூறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேச அழைத்த திசைக்காட்டி, தற்போது திசையை இழந்துவிட்டதாகத் தெரிகிறது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.