இலங்கை
ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை
ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருந்துகளை நடத்த வசதிகளை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதமொன்றினை தேர்தல் ஆணைக்குழு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களில் கண்டியில் வேட்பாளர்கள் பலர் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து விருந்துகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு முதலில் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கிற்காக தங்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு இவ்வாறு விருந்துகளை ஏற்பாடு செய்யும் வேட்பாளர்களை ஆதரிப்பதை தவிர்க்குமாறு ஹோட்டல் உரிமையாளர்களிடம் அந்த கடிதங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஹோட்டல்களில் இதுபோன்ற விருந்துகளை நடத்துவதை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் நேற்று (28) பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதற்கிடையில், வேட்பாளர்கள் பல்வேறு ஹோட்டல்களில் விருந்து வழங்குவதாக பொய் முறைப்பாடுகள் வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்றை நடாத்திக்கொண்டிருந்த போது, தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று அந்த இடத்தை சோதனையிட்ட போது, கண்டி மாவட்ட வேட்பாளர் ஒருவர் பின் வாசல் வழியாக தப்பி ஓடியதாக செய்திகள் வெளியாகியிருந்து.
இந்த வேட்பாளரின் செயற்பாடுகள் தொடர்பில் கண்டி மாவட்டத்தின் ஏனைய வேட்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.