இலங்கை
விஜித ஹேரத்திற்கு உதய கம்மன்பில விடுத்துள்ள சவால்
விஜித ஹேரத்திற்கு உதய கம்மன்பில விடுத்துள்ள சவால்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு (Vijitha Herath) பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) சவால் விடுத்துள்ளார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடுவதற்காக இன்று (28) அவரது கட்சித் தலைமையகத்தில்ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2023 செப்டம்பர் 05 அன்று சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட Dispatches எனும் நிகழ்ச்சியூடாக SriLanka Easter Bombings எனும் நிகழ்ச்சி உண்மைகளை ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவை யாரும் எதிர்க்கவில்லை.
இந்த நியமிக்கப்பட்ட குழுவிற்கு திசைகாட்டி தலைவர்கள் அல்லது வேறு எந்த கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை அத்தோடு இந்த குழுவின் உறுப்பினர்களின் திறனை அல்லது பாரபட்சமற்ற தன்மையை யாரும் எங்கும் சவால் செய்யவில்லை.
கடந்த 21ஆம் திகதி நாம் பகிரங்கப்படுத்திய அல்விஸ் குழு அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அரசாங்கம், குறிப்பாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், ஓய்வுபெற்ற நீதிபதி அல்விஸ் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கமிட்டியின் தலைவர் பதவியை வகித்து, முறைகேடு செய்ததாக முறைப்பாடு எழுந்தது யார் யாரையும் குற்றம் சாட்டலாம், மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக அமைச்சர் விஜித ஹேரத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
நாரஹேன்பிட்டியில் பிரமாண்டமான கட்டிடம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது யாரால் தான் குற்றம் சாட்ட முடியாமல் இருக்க முடியும்? அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டால், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அதனால்தான், நீதிபதி அல்விஸ் முறைகேடாக நடந்துகொண்டார் என்பதற்கான ஆதாரத்தை முடிந்தால் அடுத்த அரச ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத்திற்கு இங்கு சவால் விடுத்தேன்.
நாளை (29) விஜித ஹேரத்தின் ஊடகவியலாளர் மாநாடு, எனவே ஆதாரம் எங்கே என அமைச்சர் விஜித ஹேரத்திடம் எமது நாட்டின் சுதந்திர ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பார்கள் என நம்புகின்றேன்.
குழு கண்டறிந்த உண்மைகளுக்கான பதில்களை விட்டுவிட்டு, குழு உறுப்பினர்களை அவதூறாகப் பேசுவது அரசின் கொள்கை மற்றும் நடைமுறை என்பதால் இந்தக் குழுவில் உள்ளவர்கள் குறித்து கூற முடிவு செய்யப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.