இலங்கை

களனி பல்கலைக்கழக மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை

Published

on

களனி பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

மார்பு மற்றும் முதுகுத்தண்டு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹர பதில் நீதவான் விரேந்த கனங்கே நேற்று முன்தினம் (23) பிற்பகல் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு ராகமை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு களனி பொலிஸாருக்கு உத்தரவிட்டு்ளார்.

 

இதனையடுத்து ராகம பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஜே. ஏ. வினால் நேற்று (24 ம் திகதி) பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கியல் பிரிவின் நான்காம் வருட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இவர் பிபில ரிதிமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த பிரின்ஸ் ராஜு பண்டார என்ற இருபத்து நான்கு வயதுடைய மாணவராவார்.

 

இந்த மாணவர் பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கரா மாணவர் விடுதியின் 416ஆம் இலக்க அறையில் அவர் தங்கியிருந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், பிபில பிரதேசத்தில் வசிக்கும் இம்மாணவனின் குடும்பத்திற்கு சடலத்தை எடுத்துச்செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மேலும், மாணவனின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

பல்கலைக்கழக விடுதியில் மாணவரொருவரின் பிறந்தநாளுக்கு விருந்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருவதாகவும், விடுதியில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version