இலங்கை
74 வருட ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கும் மைத்திரி
74 வருட ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கும் மைத்திரி
கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டை நாசப்படுத்தியதாக கூறுவதை தாம் ஏற்கவில்லை என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் ஊழல், மோசடிகள் தொடர்பான எந்தவொரு விடயத்திலும் ஈடுபடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை நல்ல ஏற்பாடுகள் இருந்தாலும், ஊழல் மோசடிகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் எத்தனை விதிகள் நிறைவேற்றப்பட்டாலும், உயர் பதவிகளில் அமர்த்தப்படுபவர்கள் இந்தச் சட்டங்களைப் புறக்கணித்து ஊழல், மோசடிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.
இந்தநிலையில்;, தனது ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான மோசடி, ஊழல் சம்பவங்கள் நடக்கவிடவில்லை என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர் நல்லவராக இருக்கும் வரை ஒரு நாடு எப்போதும் வளர்ச்சியடையும். எனவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுபட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்படுபவர்கள் மத்தியில், நாட்டின் சொத்துக்களை திருடவோ, அழிக்கவோ, கொள்ளையடிக்கவோ கூடாது என்ற உண்மையான எண்ணம் இருக்க வேண்டும்.
பின்னர் இந்த எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு வரப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது சாராயம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
பிரசாரத்திற்கு நல்ல பேருந்துகள் மற்றும் நல்ல மதிய உணவு பொட்டலங்கள் தேவை. அதுவும் ஊழல் என்ற வகுதிக்குள்ளேயே அடங்கும் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.