இலங்கை
எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு
எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு
எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக எரிபொருள் விலை உயர்வடைந்தால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அவதானிப்பு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தக் குழு பரிந்துரை செய்யும் என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையால் எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அந்த சூழ்நிலையில் தலையிட்டு எண்ணெய் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்த குழுவும் முடிவு செய்திருந்தது.
அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்த போதிலும் பஸ் கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்ட போதிலும் பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.
எனவே, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணங்களை குறைப்பது குறித்த பரிந்துரைகள் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.