இலங்கை

ராஜபக்ச குடும்பத்தினருக்கு 88 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

Published

on

ராஜபக்ச குடும்பத்தினருக்கு 88 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தது.

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க வேட்புமனுக்களை கையளித்துள்ளார்.

1936 ஆம் ஆண்டில் டி.எம். ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளராக அரசியலை தொடங்கியிருந்தார்.

இதனையடுத்து டி.ஏ.ராஜபக்ச, லக்ஷ்மன் ராஜபக்ச, ஜார்ஜ் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச மற்றும் ஷியாம்லால் ராஜபக்ச என ராஜபக்ச குடும்பத்தினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version