இலங்கை

இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்ம கும்பல்: தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை

Published

on

இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்ம கும்பல்: தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மற்றுமொரு சம்பவம் நேற்று (11) வெலிவேரிய பகுதியில் பதிவாகியுள்ளது.

வெலிவேரிய பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று அதிகாலை 2 மணியளவில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை அவரது பிள்ளை மற்றும் கணவன் முன்னிலையில் பலாத்காரம் செய்துவிட்டு, பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கும்பல் கூரிய ஆயுதங்களை காட்டி இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் வெலிவேரிய, தொம்பே மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டு திருடர்களும் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இவர்கள் முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு நடமாடுவதால் கைது செய்வதில் சிக்கல்கள் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.அதற்கமைய, மேற்படி திருடர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version