இலங்கை
எம்.பிக்களின் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்து – அமைச்சரவை அனுமதி
எம்.பிக்களின் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்து – அமைச்சரவை அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யும் யோசனைக்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டைப் பாதிக்கும் பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யும் யோசனைக்கு நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், அலுவலகத்தை பராமரிப்பதற்கான மாதாந்த கொடுப்பனவான ஒரு இலட்சம் ரூபா, தொலைபேசி கொடுப்பனவான ஐம்பதாயிரம் ரூபா என்பன இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
வருடாந்த முத்திரை கொடுப்பனவான 350,000 ரூபாவும் இரத்து செய்யப்படவுள்ளதுடன் அந்த சிறப்புரிமைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை முதலில் இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதிகளின் மனைவிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளும் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளமாக 54,385 ரூபாவும், அந்தச் சம்பளத்துடன் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஒரு நாளைக்கு வருகைப் படியாக 2500 ரூபாயும், நாடாளுமன்றம் கூடாத நாட்களில் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு 2500 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இதுதவிர, அலுவலகம் பராமரிக்க மாதாந்திர உதவித்தொகையாக 100,000 ரூபாயும், பொழுதுபோக்கு உதவித்தொகையாக 1000 ரூபாவும் வழங்கப்படும்.
சாரதி கொடுப்பனவாக 3500 ரூபாவும், மாதாந்த தொலைபேசி கொடுப்பனவு 50,000 ரூபாவும், நான்கு தனியார் ஊழியர்களுக்கு10,000 ரூபாயும். வருடாந்தம் 350,000 ரூபா பெறுமதியான முத்திரை உரிமையும் வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நாடாளுமன்றத்திற்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.