இலங்கை
ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது
ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது
ஓய்வு பெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இராணுவ அதிகாரி இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய போர்முனைக்கு அனுப்பும் இடைத்தரகராக செயற்பட்டு அதற்காக பாரிய தொகையொன்றை தரகுப் பணமாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்காக அவர் பல்வேறு தடவைகள் நேரடியாக ரஷ்யாவுக்கு சென்று ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும், இலங்கையில் இருந்து அனுப்பப்படும் ஓய்வுபெற்ற ஒரு இராணுவ அதிகாரிக்கு 25 இலட்சம் ரூபா வீதம் குறித்த இராணுவ அதிகாரிக்கு தரகுப் பணமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் அறியமுடிகின்றது.
இலங்கையின் முக்கிய தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றின் பெயரில் ரஷ்யாவில் முகாம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருவதுடன், இலங்கையில் இருந்து அனுப்பப்படும் இராணுவத்தினர் அங்கு ஒருவார கால பயிற்சியின் பின்னர் ரஷ்யாவின் போர்முனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றை வகித்து அண்மையில் ஓய்வு பெற்ற குறித்த இராணுவ அதிகாரியிடம் இந்த விடயங்கள் குறித்து இரண்டொரு நாட்களில் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
அதன் பின்னர், பெரும்பாலும் குறித்த அதிகாரி கைது செய்யப்படலாம் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.