இலங்கை

ரணிலின் அமைச்சரவை எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவு

Published

on

ரணிலின் அமைச்சரவை எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவு

ஐந்து மில்லியன் இ-கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 N-வரிசை கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தின் செயல்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

எபிக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் அதன் நிறைவேற்றுத் தலைவரால் தாக்கல் செய்யப்பட்ட பேராணை மனுவை ஏற்றே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடைமுறையை மீறிய ஊழல் பேரம் என்ற அடிப்படையில் இந்த திட்டத்துக்கு எதிராக மனுதாரரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்த உத்தரவு ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

தேசிய கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறி, முறையான கொள்முதல் நடைமுறைக்கு புறம்பாக, Thales DIS Finland OY மற்றும் Just In Time Technologies (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து 750,000 எண்கள் இணையக் கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எபிக் லங்கா தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததாக தேசிய கொள்முதல் ஆணையமும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செப்டெம்பர் 02, 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த கொள்வனவுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர்கள், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், அமைச்சர்கள் அமைச்சரவை மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Exit mobile version