இலங்கை

‘ஒரே சீனா’ கொள்கையை உறுதிப்படுத்தியுள்ள அநுரவின் அரசாங்கம்

Published

on

ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒரே சீனா கொள்கையானது இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாக பதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரிமாற்றங்கள், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு கிடைத்த உதவிகள், பட்டுப்பாதை முயற்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சீன நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்புகள் என்பவற்றை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில்,பொருளாதார மீட்சி செயல்முறைக்கு சீனாவின் ஒற்றுமை, ஆதரவு மற்றும் தொடர்ச்சியான பங்காளித்துவத்தை இலங்கை நாடுகிறது என்று அவர்; கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங், சர்வதேச நிலைமைகள் எவ்வாறு மாறினாலும் அல்லது பாரம்பரிய அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், சீன அரசாங்கமும் மக்களும் எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version