இலங்கை

அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு தமிழ் ஆளுநர் நியமனம்

Published

on

அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு தமிழ் ஆளுநர் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் இன்று அவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச அதிபராக வேதநாயகன் பணியாற்றியவேளை, அப்போதைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் முடிவுகளுக்கு அமைய வெளியேற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட நாளில் அவரது ஓய்வுக்கு 3 மாத காலமே இருந்தபோதும் அவர் பதவி விலகியிருந்தார்.

இந்தநிலையில் தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வேதநாயகன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

தனது பதவியில் இருந்து அவர் விலகிய பின்னர், அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என்ற பகிரங்க கருத்தை ஒரு நிகழ்வில் முன்வைத்திருந்தார்.

இதன்போது, மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளின் சொல்லைக் கேட்டு செயற்படுத்தும் அதிகாரியாக இல்லாது பொதுமக்களுக்கு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானும் ஒரு அரச உத்தியோகத்தர்களாகவே செயற்பட வேண்டும்.

தற்போது பலரும் கூறுகின்றார்கள் 65 வயது வரை ஓய்வு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக. ஆனால் எனக்கு தெரியும் இந்த கால கட்டத்தில் என்னால் கடமையாற்ற முடியாது.

நான் நேர்மையாக கடமையாற்றியதன் காரணமாக தற்போதைய ஊழல்வாதிகளுடன் இணைந்து என்னால் கடமையாற்ற முடியாது.

அதன் காரணமாகவே என்னை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சித்தார்கள். எனினும் நான் ஓய்வினை பெற்றுக் கொண்டேன்.

நான் கடமையாற்றிய காலத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் முன்னுரிமை கொடுத்துச் செற்பட்டதில்லை. அது அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நிலையில் சில பிழையான விடயங்களை செய்ய தூண்டியவர்களுடன் என்னால் கடமையாற்ற முடியாது.” என்றார்.

Exit mobile version