இலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கனேடிய தமிழர் பேரவையின் தகவல்

Published

on

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கனேடிய தமிழர் பேரவையின் தகவல்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கனேடியத் தமிழர் பேரவை (CTC) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

அவரது வெற்றி இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. மாற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்கான மக்களின் தெளிவான விருப்பத்தைக் குறிக்கிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நடத்திய மாற்றத்துக்கான பரப்புரை முயற்சி மில்லியன் கணக்கான இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து இயங்கியமையை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகின்றோம்.

புதிய ஜனாதிபதி தனது பதவிப் பொறுப்புக்களை ஏற்கும் நிலையில், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் கவலைகள் மற்றும் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்கு வரவிருக்கும் அவரது நிர்வாகம் முன்னுரிமையளிக்கும் எனக் கனேடியத் தமிழர் பேரவை நம்புகிறது.

பல தசாப்தங்களாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமத்துவம், நீதி மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழர்களின் நீதிக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பார் என்றும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்ச் சமூகம் முழுமையாகப் பங்கெடுக்க முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

மேலும், அமையவுள்ள ஆட்சி கடந்த காலத் தவறுகளை மேலும் செய்வதைத் தவிர்த்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்வாங்குதல் போன்றவற்றால் வழிநடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமாரவின் தலைமைத்துவம், இலங்கையை ஊழலற்ற, பாகுபாடற்ற, நேர்மைத்திறனுடன் கூடிய அனைத்து சமூகங்களும் செழிப்பாக வளரக்கூடிய சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நகர்த்துமெனக் கனேடியத் தமிழர் பேரவை நம்பிக்கை கொண்டுள்ளது.

புதிய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, தமிழ் மக்கள் உட்பட அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகள், நலன்கள் போன்றவற்றை உறுதிசெய்து, நேர்மை, உள்வாங்குதல் மற்றும் நீதியுடனான வழிநடத்தலை அவர் தனது பதவிக்காலத்தில் மேற்கொள்ள நாங்கள் அவரை ஊக்குவிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version