இலங்கை

கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவுடன் பேச எதுவுமில்லை : ரணில் சிறப்பு பேட்டி

Published

on

கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவுடன் பேச எதுவுமில்லை : ரணில் சிறப்பு பேட்டி

காஷ்மீர் பிரச்சனையை எப்படி பாகிஸ்தானுடன் இந்தியா(india) பேசமாட்டாதோ அதேபோன்றுதான் கச்சதீவு விவகாரத்திலும் நாம் இந்தியாவுடன் பேசமாட்டோம். ஏனெனில் கச்சதீவு எமது பகுதியாகும்.

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்தப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி:- இந்தியா-இலங்கை(sri lanka) இடையே கச்சத்தீவு ஒரு தொடர் பிரச்சனையாக இருக்கிறது. இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தயாரா..!

பதில்:- கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது நீங்கள் எப்படி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடன்(pakistan) பேச மாட்டீர்களோ, அதே மாதிரிதான் நாங்களும்.

கேள்வி:- கச்சத்தீவை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வாய்ப்பே இல்லையா..!

பதில்:- நாம் இரண்டு பேரும் ஒரே கொள்கையை தானே வைத்திருக்கோம். நம்ம நாட்டு எல்லைகளை பற்றி மற்றவர்களோடு பேசுவதில்லை. நீங்கள் காஷ்மீர் பற்றி பேச மாட்டீர்கள். நான் கச்சத்தீவை பற்றி பேசமாட்டேன்.

கேள்வி:- இந்திய அரசு, கச்சத்தீவை ஒரு முடிந்து போன பிரச்சனையாக நினைக்கவில்லையே..!

பதில்:- இந்தியா அதை முடிந்து போன பிரச்சனையாகத்தான் பார்க்கிறது. அது எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அது அவர்களுக்கு தெரியும். இந்திரா காந்தியும், பண்டாரநாயக்காவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஊடகங்கள்தான் அப்படி பார்ப்பதில்லை.

கேள்வி:- சமீபத்தில் இந்தியா இதுபற்றி உங்களிடம் பேசவில்லையா..!

பதில்:- இல்லை. அவர்கள் மீனவர் பிரச்சனை பற்றி மட்டும்தான் பேசினார்கள். நாங்களும் மீனவர் பிரச்சனையை அவர்களிடம் எழுப்பினோம்.

கேள்வி:- கச்சத்தீவை பற்றி உங்களிடம் பேசவே இல்லையா!

பதில்:- அது ஒரு பிரச்சனையே இல்லையே…

கேள்வி:- வரலாற்று குறிப்புகளின்படி, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்றுதான் இந்தியாவில் பலர் நினைக்கிறார்களே…

பதில்:- வரலாற்று குறிப்பெல்லாம் எதுவும் இல்லை. இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது. எங்களுக்கு இந்தியாவுடன் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் கூட பெரும்பாலான மக்கள் இதை பற்றி கவலைப்படவில்லை. அந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் மட்டும்தான் எழுப்புவார்கள். அதுவும் ஒரு அரசியல் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் அவர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். அந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்.

கேள்வி:- இது வெறும் தமிழ்நாட்டின் பிரச்சனை என்கிறீர்களா!

பதில்:- தமிழ்நாட்டிலும் ஒரு சின்ன பகுதியில்தான் இருக்கிறது. சென்னை, மதுரை, கோவையிலோ இந்த பிரச்சனை இல்லையே. நாங்கள் இந்தியா முழுவதும் செல்கிறோம். இது ஒரு பிரச்சனையே இல்லை என்று எங்களுக்கு தெரியும்.

கேள்வி:- இந்திய வெளியுறவு அமைச்சர் கச்சத்தீவு இந்தியாவுடையது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறாரே!

பதில்:- அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. ஊடகத்தில்தான் அவரிடம் பேட்டி எடுத்து போட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான். இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் அளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன். முதலில், யாழ்ப்பாணத்தில்(jaffna) உள்ள மீனவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பங்கை வேறு மீனவர்கள் எடுத்து செல்லாமல் இருக்க வேண்டும். நீங்களும் (தமிழகம்) அதை மனிதாபிமானத்தோடு அணுகுவீர்கள் என்று நினைக்கிறேன். இது இலங்கையின் கடல் பகுதி. அமர்ந்து பேசினால் உங்களுக்குள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version