இலங்கை

இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

Published

on

இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநாட்டில் நல்ல வாய்ப்புகளை தேடி இலங்கையை விட்டு வெளியேறுகின்றமை பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

“வரி செலுத்துவோர் அவர்களுக்கு கல்வி கற்க பணம் செலுத்துவதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதுடன், இறுதியில், இது நாட்டிற்கு பெரும் பின்னடைவாகும்,” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும், பெரும்பாலான தொழில்நுட்பம் மற்றும் விவசாய பட்டதாரிகள் உயர் கல்விக்காக வெளியேறி, வெளிநாட்டில் தங்குவதால் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் செயற்பாடாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற பிள்ளைகள் கூட சில சமயங்களில் போட்டித்திறன் காரணமாக அங்கீகாரம் பெறுவதில்லை என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

“மேலும், பணக்கார குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதனால் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் சிக்கித்தவிக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் முன்னேறி வருகின்றன.

வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், நமது கல்வி முறையை நவீனப்படுத்த வேண்டும். அப்போது தான் வெளிநாட்டு வாய்ப்புகளைப் பெற முடியும்’’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியில் ஆண்களின் பங்களிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனால் கல்வியில் பாலின விகிதத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் உள்ள ஆண்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்குப் பதிலாக விரைவாக வேலை தேட முயல்வதாகக் கூறலாம். “பெண்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்காததால், அவர்கள் பொதுவாக உயர்கல்விக்கு ஆசைப்படுகிறார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை ஆண்டுதோறும் நடத்தும் பாடசாலை ஆய்வின்படி, அரச பாடசாலைகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறைந்த பிறப்பு வீதம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போக்குவரத்துச் செலவுகள் போன்ற பல காரணிகளினால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு நிதித் தடைகள் ஏற்படக்கூடும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version