இலங்கை

தமிழ் பொது வேட்பாளர் குறித்து தனது கருத்தை கூறிய அநுர

Published

on

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல் சமூக அமைப்புக்கும் தமது தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் உரிமை உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட அநுரகுமாரவிடம் தமிழ் பொது வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு வேட்பாளரை நியமிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை ஆகும். எனினும், தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் எனும் அடிப்படையில் நாம் நமது அரசியலை நகர்த்த வேண்டிய தேவையில்லை.

குறித்த சமூகங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். தெற்கிலிருந்து உருவான எந்தவொரு அரசாங்கமும் இதுவரை காலமும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாததால் பொது வேட்பாளர் என்ற விடயத்தின் ஊடாக கவனத்தை ஈர்க்க அவர்கள் தீர்மானித்திருக்கலாம்.

இருப்பினும், நாம் பிரிவினை வாத அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்த அரசியலை முன்னகர்த்த வேண்டும்.

எவ்வாறாயினும் இதன் மூலம் அவர்கள் கூற முற்படும் செய்திகள் மற்றும் கருத்துக்களை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழ் பொது வேட்பாளர் பெறும் வாக்குகளின் மூலம் தமிழ் சமூகம் எதிர்ப்பார்க்கும் விடயங்களையும் எம்மால் மதிப்பிட முடியும்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version