இலங்கை

எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சியிலும் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள்

Published

on

எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு வாக்களித்தும் தமிழ் மக்களான எங்களை அவர்கள் தாராளமாக ஏமாற்றி இருக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு.ஊடக அமையத்தில் இன்று(14.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலும் கூட சில வேளைகளில் பொது வேட்பாளர் திறக்கப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் யாரோ ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்போம்.

ஆனால் முதல் தடவையாக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்ற போது அதே போன்று தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை வைத்து இறக்கப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கின்றது.

அதனை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் வழி கூறக்கூடாது.

கேட்கின்றார்கள் இந்த வேட்பாளர் வெல்லப் போகின்றாரா என்று. இவருக்கு வாக்களிப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது என கேட்கின்றார்கள்.

நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். எட்டு ஜனாதிபதிகளுக்கு நாங்கள் வாக்களித்தோம். எதைப் பெற்றிருக்கின்றோம் ஒன்றையுமே அவர்கள் தரவில்லை. அவர்களை வெற்றி பெற செய்திருக்கின்றோம்.

கடந்த நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்தோம் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தோம். பின்னர் மைத்திரிபால என்ன செய்தார்.

2018 ஆம் ஆண்டு நாங்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று மைத்திரிக்கு வாக்களித்தோமோ அவர்களை பிரதம மந்திரியாக வைத்துக்கொண்டு அழகு பார்க்கின்றார்.” என்றார்.

Exit mobile version