இலங்கை

முற்றாக நிறுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதி! முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய தயாராகும் அநுர

Published

on

முற்றாக நிறுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதி! முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய தயாராகும் அநுர

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

நமது நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியலைப் பற்றி மக்கள் கொண்டுள்ள மிகக் கேவலமான, மோசமான எண்ணத்தின் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை தேவை.

 

நாடு பெரும் பாதாளத்தில் விழுந்திருக்கும் போது அரசியல்வாதிகள் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் அவர்களின் சலுகைகளை மேலும் அதிகரித்துக் கொள்வதேதான்.

 

தற்போது வாகன இறக்குமதி முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தங்களின் சிறப்புரிமைகளை பெற போராடுகின்றனர். அது எவ்வளவு அசிங்கமானது?

 

அதேபோன்று கடந்த காலங்களில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்திலேயே எம்.பி.க்களின் எரிபொருள் கொடுப்பனவு ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கப்பட்டது.

 

அந்த உதவித்தொகையை எடுக்காத ஒரே நாடாளுமன்றக் குழு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு மட்டுமேயாகும். நாம் மக்களுக்காக தொடர்ந்தும் தியாகங்களைச் செய்ய தயாராகவே உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version