இலங்கை

சஜித்தின் முல்லைத்தீவு தேர்தல் பிரசார கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி

Published

on

சஜித்தின் முல்லைத்தீவு தேர்தல் பிரசார கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி

முல்லைத்தீவில் (Mullaitivu) நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பிரசார கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த தேர்தல் கூட்டம், முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அருகில் நேற்று (02.09.2024) காலை ஆரம்பமாகி நண்பகலில் முடிவடைந்தது.

பிரதான வீதிக்கு அண்மையில் இத்தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், தேர்தல் கூட்டத்திற்கு பல இடங்களில் இருந்து பேருந்துகளின் மூலம் மக்கள் அழைத்துவரப்பட்டு இருந்தனர்.

அத்துடன், கூட்டம் முடிவடைந்ததும் கூட்டத்தில் இருந்து வெளியேறிய மக்கள் பிரதான வீதியில் கூட்டமாக சென்றுள்ளனர்.

மக்களை ஏற்றிச் செல்ல பேருந்துகள் ஒரே நேரத்தில் பரபரப்பாக இயங்கியதால் வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மற்றைய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின.

இதனால் சிறிது நேரம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சற்றுத் தொலைவில் முல்லைத்தீவு முள்ளியவளை பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

மக்களின் இயல்பான போக்குவரத்து சற்று நேரம் இயல்புக்கு மாறாக நெருக்கடியை சந்தித்ததால் புதிய அசௌகரியம் ஏற்பட்டது.

அதிக மக்களை பிரதான வீதிக்கு அண்மையில் ஒன்றாக கூட்டும் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இயல்பான பயணங்களை குழப்பாத வகையில் நிகழ்வுக்கான பயணங்கள் அமையும் போது பாராட்டத்தக்கதாக இருக்கும். ஆயினும் அன்றைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தலில் நேர்த்தி இருந்ததாக அவதானிக்க முடியவில்லை என இது தொடர்பில் சமூகவியல் கற்றலாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தேர்தல் கால செயற்பாடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய சந்தர்ப்பங்களிலாக இருந்தாலும் சரி இயல்பான மக்கள் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தாத அணுகுமுறையே பல்லின சமூகத்தினை கொண்ட ஒரு நாட்டுக்கு உவப்பானதாக இருக்கும்.

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் இனிவரும் காலங்களில் கருத்தில் எடுத்து செயற்படுதல் பாராட்டுக்குரியதாக இருக்கும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Exit mobile version