இலங்கை
கிழக்கு மாகாணத்தை வேறு வழியில் செல்லவிடமாட்டோம்: அநுர திட்டவட்டம்
கிழக்கு மாகாணத்தை வேறு வழியில் செல்லவிடமாட்டோம்: அநுர திட்டவட்டம்
முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாகாணத்தை மாத்திரம் வித்தியாசமான பாதையில் செல்ல வழிவகுக்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்துள்ளார்.
நாடு அநுரவோடு என்ற தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
”தெற்கின் பெரும்பான்மை சிங்கள மக்கள் திசைகாட்டியுடனேயே இருக்கிறார்கள். தெற்கு, சபரகமுவ, மேற்கு, வடமத்திய, மத்திய, வடமேல் ஆகிய எல்லா மாகாணங்களிலும் பெரும்பான்மை மக்கள் எங்களைச் சுற்றியே இருக்கிறார்கள்.
அவர்கள் எங்களிடம் கேட்பது “தோழர் கிழக்கு என்னவாகும்” என்று. முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாத்திரம் வித்தியாசமான பாதையில் போகுமா?
இந்த தடவை தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நடைபெறப்போவது ஜனாதிபதி தேர்தலாகும்.
இப்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளை அளித்து பொதுத்தேர்தல் வந்ததும் உங்கள் பிரதேசத்திற்கு அவசியமான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து கொள்ளுங்கள்.
ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யும்போதும் சரியானவரைத் தெரிவுசெய்யுங்கள். 2019 இல் முஸ்லிம் காங்கிரசிற்கு புள்ளடியிட்டு தௌபிக்கை நாடாளுமன்றம் அனுப்பினீர்கள்.
பைசர் காசீமை நாடாளுமன்றம் நாடாளுமன்றம். அவர்கள் கோட்டாபயவை தோற்கடிப்பதற்காக வாக்கு கேட்டவர்கள். கோட்டாபயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவே அரசியலமைப்பிற்கான இருபதாம் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
நீங்கள் கோட்டாபயவிற்கு எதிராக வாக்குகளை அளித்தாலும் அவர்கள் நாடாளுமன்றம் போய் கோட்டாயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக வாக்களித்தார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து இறந்தகாலம் பற்றி சிந்தித்துப்பார்த்து நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் விரும்புகின்ற தலைவருக்கு வாக்களியுங்கள்.
ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் கொள்கைகள் கிடையாது, விடயங்கள் கிடையாது, அதனால் சேறு பூசிக்கொண்டு, குறைகளைக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் பெரஹெராவை நிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
நாங்கள் வந்ததும் தானம் வழங்குவதை நிறுத்திவிடுவதாக ஒருசில பிக்குமார்கள் கூறுகிறார்கள். சிங்கள மக்களிடம் அவ்வாறுகூறி முஸ்லிம் பிரதேசங்களுக்கு வந்ததும் “எங்கள் அரசாங்கத்தின்கீழ் நீங்கள் ஐந்துவேளை தொழுவதை நிறுத்துவதாக” கூறுகிறார்கள்.
வர்த்தகம் செய்ய இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள். தாடி வளர்க்க இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள். தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
இவ்வாறான குறைகூறல்கள், பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களை பரப்பி வருகிறார்கள். எமது நாட்டு அரசியல் மேடைகளில் இனிமேலும் இனவாத கோஷங்களை எழுப்ப இடமளிக்கக்கூடாது.
தேசிய மக்கள் சக்தியின் மேடையிலும் வேறு எந்த இடத்திலும் இனவாதக் கூற்றுகளை விடுக்க எமது அரசாங்கம் இடமளிக்க மாட்டாது. அவ்விதமாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.” என்றார்.