இலங்கை
ஊளையிடுவதை நிறுத்துங்கள் எமது வாயும் சும்மா இருக்காது : ராஜபக்சாக்களை எச்சரிக்கும் முன்னாள் சகா
ஊளையிடுவதை நிறுத்துங்கள் எமது வாயும் சும்மா இருக்காது : ராஜபக்சாக்களை எச்சரிக்கும் முன்னாள் சகா
அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பனேதவிர, மீண்டும் ராஜபக்ச(rajapaksa) முகாமுக்குள் செல்வதற்குரிய எண்ணம் என்னிடம் இல்லை என்று மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவரும் தற்போது ரணிலுக்கு ஆதரவளிப்பவருமான மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன(s m chandrasena) தெரிவித்தார்.
அத்துடன், ராஜபக்சாக்கள் பக்கம் இருக்கும் நரிகள் ஊளையிடுவதை நிறுத்தாவிடின் தமது வாயும் சும்மா இருக்கப்போவதில்லை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ எமக்கு எதிராக சேறு பூசும் பிரசாரத்தை ராஜபக்ச தரப்பில் உள்ள சிலர் முன்னெடுக்கின்றனர். எமக்கும் கூறுவதற்கு நிறையவே உள்ளன என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.
சலூன் கதவு மூடப்படுமாம், அரசியலில் இருந்து ஓய்வுபெற்றால் கூட பரவாயில்லை, அந்த சலூன் கதவு பக்கம் நாம் செல்லவில்லை. முதுகெலும்புடன்தான் வெளியேறினேன்.
ஜனாதிபதி சிறப்பாக செயற்பட்டதால்தான் அவரின் காலைவாருவதற்கு முற்படுகின்றனர். நாமல் தரப்பின் தவறான முடிவால்தான் கட்சி பிளவுபட்டுள்ளது. ஒன்றாக இருந்ததால்தான் நாம் பொதுமேடைகளில் ராஜபக்சாக்களை விமர்சிப்பதில்லை.
ஆனால் கையாட்களை களமிறக்கி எம்மை விமர்சிக்க முற்பட்டால் இருக்கும் சொற்ப வாக்குகள்கூட இல்லாமல்போகும்.”எனத் தெரிவித்தார்.