இலங்கை

அனுமதி வழங்குவதற்கு முன்னரே விநியோகிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: நாடாளுமன்றில் தகவல்

Published

on

அனுமதி வழங்குவதற்கு முன்னரே விநியோகிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: நாடாளுமன்றில் தகவல்

உரிமம் வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே சுமார் 90 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(21) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை, வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நான்கு மாதங்களாகியும் அதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலைமை இருந்தபோதிலும் சுமார் 90 மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 90 மதுபான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை.

இதற்கிடையில், மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து வசூலிக்காத வரியை வசூலிக்க, மதுவரி திணைக்களத்திற்கு நிதியமைச்சகம் ஆலோசனை வழங்கவில்லை என, வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, டபிள்யூ.எம்.மென்டிஸ் மற்றும் நிறுவனம் 3,447, 109, 832.59 ரூபாய்களையும், வயம்ப டிஸ்டில்லரீஸ் /ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ் ரூ. 500,723, 437 ரூபாய்களையும் மெக்கல்லம் ப்ரூவரிஸ் 619, 964,802 ருபாய்களையும், களுத்துறை கூட்டுறவு டிஸ்டில்லரீஸ் 17, 878, 752 ருபாய்களையும் செலுத்த தவறியுள்ளன.

இதில் வயம்ப டிஸ்டில்லரீஸ் நிறுவனம் மட்டும், தவறிய வரிகளை செலுத்துவதை தடுக்கும் உத்தரவை நீதிமன்றத்திடம் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், மதுவரி திணைக்களம் இந்த வருடத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது” என ரணவக்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version