இலங்கை
செப்டம்பர் 22இல் ஆட்சிப்பீடம் ஏறுவோம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர
செப்டம்பர் 22இல் ஆட்சிப்பீடம் ஏறுவோம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைத்து மறுநாள் நாம் ஆட்சிப்பீடம் ஏறுவோம் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடையில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும்.
ஊழல், மோசடியை ஒழிக்கும். வரி செலுத்தாமல் உள்ள பலரிடமிருந்து 169 பில்லியனைப் பெற முடியும்.
அவர்களை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கட்சி தாவும் தவளை அரசியலுக்குத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவு கட்டப்படும்.
இந்தப் பக்கம், அந்தப் பக்கம் எனக் கட்சி தாவல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இப்படியான தவளை அரசியலை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
எனவே, தவளை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். எமது நாட்டுக்குக் கொள்கை அடிப்படையிலான அரசியலே தேவைப்படுகின்றது. அந்த வழியிலேயே எமது அணி பயணிக்கின்றது.
தாவும் அரசியல் தவளைகளுக்கு எமது அணியில் இடமில்லை. இவ்வாறு தாவும் தவளைகள் இணைந்து கூட்டணிகள் அமைத்திருந்தாலும் அவை எமக்குச் சவாலாக அமையாது. கட்சி தாவினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்குரிய சட்டம் இயற்றப்படும்.
தற்போது அந்தச் சட்டம் இருந்தாலும் அதனைப் பலப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படும். அசிங்கமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்”எனவும் கூறியுள்ளார்.