இலங்கை

மின் கட்டணத்தை குறைக்க வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

Published

on

மின் கட்டணத்தை குறைக்க வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் மின்சாரக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகம் என அட்வோகாடா (Advocata) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்திருந்தார்.

மின்சார கட்டண அளவீட்டு திட்டத்தின் போது மின்சார அலகு ஒன்றிற்கான உற்பத்திக்கான செலவு மற்றும் மின்சார உற்பத்தியின் காலம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

இதனால், நீர்மின்சாரத்திற்கு மேலதிகமாக எண்ணெய் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படுவதனால் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் சில நாடுகளில் மின்சார நுகர்வோருக்கு புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை “ப்ரீ-பெய்டு” முறைகள் மூலம் பெறலாம்.இதனால் அவர்கள் அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை அறிமுகம் செய்வதன் மூலம் நுகர்வோர் தங்கள் மின் பயன்பாட்டை குறைக்க முடியும். இவ்வாறான செயற்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார பாவனையை நிர்வகித்து மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 298.2 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 2023 ஆம் ஆண்டு மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் 61.2 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார அலகு உற்பத்திக்கான செலவை விட குறைவாகவே கட்டணம் வசூலிப்பதாக மின்சார சபை கூறுவதாகவும், எவ்வாறாயினும் மின்சார சபை மேலும் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version