இலங்கை

பல பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

Published

on

பல பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வரி இலக்குகளை நோக்கி இலங்கை படிப்படியாக நகர்ந்து வருவதாக ஜனாதிபதி அலுவலக அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரண்டா தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,121 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

மேற்படி காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1025 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் 815 பில்லியன் ரூபாவும், மதுவரி திணைக்களம் 115 பில்லியன் ரூபாவும், ஏனைய நிறுவனங்களில் இருந்து 165 பில்லியன் ரூபாவும் வரிகளாக வசூலிக்கப்பட்டுள்ளன.

வரி வருவாய் இலக்குகளுக்குள் இலங்கை தொடர்ந்தும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய வங்குரோத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியுள்ளமைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

மேற்படி காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்ட வரி வருமானம் 2,005 பில்லியன் ரூபாவாகும். இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 4,127 பில்லியன் ரூபாவாகும்.

இதில் 2,024 பில்லியன் ரூபா உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், 1,533 பில்லியன் ரூபா சுங்கமும், 232 பில்லியன் ரூபா மதுவரி திணைக்களமும் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version