இலங்கை

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

Published

on

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு (Batticaloa) – வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை கடக்க முயற்சித்த சிறுவன் மீது வான் மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை (Valaichchenai ), மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது தாய், தந்தையுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன் விளக்கு எரியாது பழுதடைந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தை பாலத்தில் நிறுத்திவிட்டு அதனை தந்தையார் சரி செய்துகொண்ட நிலையில் தாய் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்பக்கமாக சென்று கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது தாயிடம் செல்ல சிறுவன் வீதியை குறுக்கே கடக்க முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த டொல்பீன் ரக வான் சிறுவன் மீது மோதியதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வான் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version