இலங்கை

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கி விட்டுச்சென்ற பேருந்து: தமிழர் பகுதியில் சம்பவம்

Published

on

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கி விட்டுச்சென்ற பேருந்து: தமிழர் பகுதியில் சம்பவம்

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச்சென்ற பேருந்து மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (12.8.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை – யாழ். (jaffna) சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பேருந்து வண்டியில் பயணித்த ஆசிரியர் ஒருவருக்கே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையிலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி பேருந்து வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேருந்திலிருந்து தவறி விழுந்து விட்டது. அதை நன்கு அவதானித்த சாரதி பேருந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாகச்சொன்னார்.

நான் அந்த பையை எடுக்கச்சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்று விட்டார். உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துப்பார்க்கிய நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version