இலங்கை

வெடுக்குநாறிமலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Published

on

வெடுக்குநாறிமலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா (Vavuniya) – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசம் தொடர்பான சர்ச்சைக்கு நேற்று (09) உயர் நீதிமன்றத்தில் இணக்கமான தீர்வு ஒன்று பெறப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயம் காணப்படும் பிரதேசத்தில் தொன்மையான மரபுரிமை சின்னங்கள் இருப்பதாகவும் அவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தவறி விட்டதாகவும் மூன்று பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரட்ண, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயப் பூசகர் மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

தொன்மையான மரபுரிமை இடங்கள், நிலையங்கள், சின்னங்கள் அங்கிருந்தாலும் வரலாற்றுக் காலத்தில் இருந்து அங்கு மேற்படி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடு நடைபெற்று வருவதால் அதைக் தடுக்க முடியாது, தடுக்கக் கூடாது என வாதிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தொன்மையான மரபுரிமை மையங்களுக்கு பாதிப்போ, சேதமோ ஏற்படுத்தாமல் இரண்டு தரப்பினரும் தங்கள் வழிபாடுகளை தடையின்றி முழு அளவில் ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, இவ்விடயத்தை ஒட்டி வவுனியா நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கும், நேற்று உயர்நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த இணக்க ஏற்பாட்டை தெரிவித்து, அதன் அடிப்படையில் தீர்வு காண்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version