இலங்கை

உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் ஜனாதிபதி

Published

on

உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் ஜனாதிபதி

நாட்டின் ஜனாதிபதி, முன்மொழிந்த ஒருவர் தொடர்பான வாக்கெடுப்பின் போது அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் கலந்து கொள்ளாமல் இருப்பது என்பது பிரேரணைக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பதாக அமையுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரியை நீக்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கோருவது குறித்தும் ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவியில் செயற்படுவதைத் தடுக்கும் வகையில் மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள், இடைக்கால உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் வாக்கெடுப்பின்போது, அதன் ஒரு உறுப்பினர் வாக்களிக்காதது அல்லது பிரசன்னமாகாதது என்பது, குறித்த யோசனைக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவே கருதப்படும் என்பது குறித்து தெளிவான சட்ட விதிகள் எதுவும் இல்லை என்பதால், நீதிமன்றத்தின் கருத்தைப் பெற ஜனாதிபதி முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை அரசியலமைப்பு பேரவையால்; அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் நியமனங்களை கேள்வி கேட்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற கூற்று தமது பார்வையில், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version