இலங்கை

கருவிழிகளை பாகிஸ்தானியர்களுக்கு வழங்குமாறு உயில் எழுதும் இலங்கையர்கள்

Published

on

கருவிழிகளை பாகிஸ்தானியர்களுக்கு வழங்குமாறு உயில் எழுதும் இலங்கையர்கள்

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரவளித்த பாகிஸ்தானை, இலங்கை மக்கள் நட்பு நாடாக மதிக்கின்றனர் என்று பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவீந்திர சி விஜேகுணரத்ன (Ravindra C Wijegunaratne) தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நேற்று (26) நடைபெற்ற “பாகிஸ்தான் – இலங்கை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பில் பிராந்திய ஆய்வுகள் நிறுவகத்தின் கருத்தரங்கின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரதமரும் உலகின் முதல் பெண் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த போதிலும், 1971 போரின் போது, இலங்கையின் வான்பரப்பையும் கொழும்பு விமான தளத்தையும் பயன்படுத்த, பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கியதாக ரவீந்திர தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முப்பது வருடகால மிக மோசமான போரை நடத்தியது, இந்தப் போரில் பாகிஸ்தானைப் போல எந்த நாடும் இலங்கையை ஆதரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் முக்கியமான மற்றும் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்துடன் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ஆழமான உறவுகளை ஏற்படுத்தியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 74 சதவீத பௌத்தர்களும், 16 சதவீத முஸ்லிம்களும், மீதமுள்ள மக்கள் தொகையில் இந்துக்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிகளவில் கருவிழிகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு இலங்கை சுமார் 88,000 கருவிழிகளை தானமாக வழங்கியுள்ளது அதில், 36,000 க்கும் அதிகமானவை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக ரவீந்திர குறிப்பிட்டார்

இந்தநிலையில், ஒவ்வொரு இலங்கையரும் தனது கடைசி உயிலில் முடிந்தால் தனது கண்களை ஒரு பாகிஸ்தானியருக்கு தானமாக வழங்க வேண்டும் என்று எழுதுகிறார் என்றும் பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவீந்திர சி விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version