இலங்கை
யாழில் கனேடிய தமிழ் குடும்பமொன்றின் மீது தாக்குதல் நடத்திய பெண் கைது
யாழில் கனேடிய தமிழ் குடும்பமொன்றின் மீது தாக்குதல் நடத்திய பெண் கைது
யாழ்ப்பாணம் – அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பலொன்று நடாத்திய தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரொருவர் ஒரு வருடத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(25.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பரந்தன் பகுதியில் உள்ள பெண்ணொருவரே யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி கனேடிய தமிழ் குடும்பமொன்றின் மீது வன்முறை கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதுடன், பெருமளவு வெளிநாட்டு நாணயம் மற்றும் பொருட்கள், நகைகள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த சம்பவத்தை வெளிநாட்டில் உள்ள ஒருவரின் பணிப்பில் உள்ளூரில் வழிநடத்தியதாக கருதப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கனடாவில் உள்ள ஐயப்பன் கோயிலொன்றின் தலைவர் சொல்லியே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளதுடன் அதற்குரிய ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரான பெண் சில குற்ற சம்பவ வழக்குகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 48 மணி நேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் விசாரிக்க நீதவான் அனுமதியளித்துள்ளார்.