இலங்கை

டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று புலம்பெயர் இலங்கையர்களுக்கு சென்ற செய்தி : கிடைத்த பிரதிபலன்

Published

on

டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று புலம்பெயர் இலங்கையர்களுக்கு சென்ற செய்தி : கிடைத்த பிரதிபலன்

வெளிநாட்டில் பணி புரியும் ஊழியர்களிடம் நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று சில அரசியல்வாதிகள் கூறினார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் அவ்வாறான அரசியல் செயற்பாடுகளுக்கு இடம்கொடுக்கவில்லை. பணத்தினை நாட்டுக்கு அனுப்பி வைத்தனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

குருணாகல்(Kurunegala) சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு ஊழியர்கள் 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியதாலேயே ஒரு நாடாக காலூன்றி நிற்க முடிந்தது. 2022 ஆம் ஆண்டில் இது 3 பில்லியன் டொலர்களாக குறைந்து போனது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர்களை வௌிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

சில அரசியல் தலைவர்கள் டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று கூறி நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயன்றனர். ஆனால் வௌிநாட்டு தொழிலாளர்கள் அவ்வகையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத் திட்டத்தினால் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த நாட்டுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, நாட்டின் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை அரசாங்கம் ஈட்டிக்கொண்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வாகன அனுமதிப் பத்திரத்தை விரைந்து வழங்குதல், ஆறு முறைக்கு மேலாக வெளிநாடு சென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன.

இன்றும் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டமே முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள எதிர்கட்சி எம்.பி

Exit mobile version