இலங்கை
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை
மியன்மாரிலும் (Myanmar) ரஷ்யாவிலும் (Russia) சிக்கியுள்ளவர்களை நாட்டுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) விசேட கூற்றொன்றை முன்வைத்துக் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில், “எமது நாட்டைச் சேர்ந்த 49 பேர் மியன்மாரிலும் மற்றொரு சாரார் ரஷ்யாவிலும் சிக்கியுள்ளனர். ரஷ்யாவில் சிலர் இறந்தும் போயுள்ளனர். இவ்வாறு சிக்கியுள்ள தரப்பினரை எப்படியாவது இலங்கைக்கு அழைத்து வருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.
இரண்டு பயங்கரவாத முகாம்களிலும் எமது நாட்டையும் எத்தியோப்பியாவையும் சேர்ந்தவர்கள் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டு 252 நாட்கள் கடந்துவிட்டன.
இதுவரை, இந்தியா (India), நேபாளம் (Nepal), உகாண்டா (Uganda), மொராக்கோ ஆகிய நாடுகள் தமது இராஜதந்திர உறவுகள் மூலம் தங்கள் நாட்டு இளைஞர்களை மீட்டுள்ளனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொழில் தருவதாக கூறி ஏமாற்றி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்நாட்டு இளைஞர்கள் யுவதிகளின் பெற்றோர்கள் இணைந்து நேற்று நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மியன்மாரில் சிக்கியுள்ள இளைஞர் யுவதிகள் குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தலையிட்டு, இதற்காகப் பிரத்தியேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்பி இருந்தது.
இந்த பிரச்சினைகளை அரசியலாக்காமல் இந்த இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை குறித்து சிந்தித்து எம்மாலான நடவடிக்கைகளை எடுத்தோம். துபாய் வழியாகச் செயல்படும் இணைய விசா மோசடி மூலமே இவர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். எனவே இவ்விடயத்தில் அரசாங்கத்தின் முறையான தலையீடு அவசியமாகும்” என தெரிவித்துள்ளார் என்றார்.