இலங்கை

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

Published

on

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரான கிளப் வசந்த பெரேராவின் சடலமும், உயிரிழந்த மற்றையவரின் சடலமும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (08) அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டடிருந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த பெரேராவின் உடலில் 8 தோட்டாக்கள் காணப்பட்டதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரனீத் செனவிரத்ன வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தோட்டாக்கள் அவரது தலையில் தாக்கப்பட்டதாகவும், மற்ற ஐந்து தோட்டாக்கள் மார்பு மற்றும் வயிற்றில் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலை மற்றும் இடுப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,மற்றையவரின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரபல பாடகர் கே சுஜீவா தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவி களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Exit mobile version