இலங்கை
சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடல்! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடல்! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (09.07.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், அங்கு நிலவி வந்த நிர்வாக சீர்கேடுகளையும், குறைபாடுகளைம் அடையாளம் கண்டு அவற்றை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அதனடிப்படையில், பெண் நோயியல் பிரிவு, சந்திர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு. பிரிவு ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம் கடந்த 14 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததுடன், நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இந்நிலையில், அவற்றை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர், முதற் கட்டமாக ஐ.சி.யு. மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை செயற்படுத்தியுள்ளார்.
மேலும், சந்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் சத்திர சிகிச்சை பிரிவை இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதேபோன்று, குறித்த வைத்தியசாலையில் உயிரிழப்பவர்களின் உடல்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், அதனை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொண்டு, பொது மக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற அசௌகரியங்களை தடுப்பதற்கும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மருந்துப் பொருட்கள் உரிய களஞ்சியப்படுத்தல் ஏற்பாடுகள் இன்றி, தரையில் போடப்பட்டிருந்தன. குறித்த வைத்தியசாலையில் 22 வைத்தியர்கள் கடமையாற்றி வந்ததுடன், அவர்களுள் பெரும்பாலானவர்கள், மாதத்தில் 10 நாட்கள் மாத்திரமே வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளனர்.
இவ்வாறான பல்வேறு சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு வைத்திய அத்தியட்சகர் முன்னெடுத்த முயற்சிகளை விரும்பாத சக்திகள், அங்கு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை அனைத்தையும் அறிந்து கொண்ட பொது மக்கள் பாரிய போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
எனவே, குறித்த விவகாரம் தொடர்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளார்.