இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அம்பாறையில் (Ampara) நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரிய நீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடந்த வியாழக்கிழமை (04) கிடைத்த விசேட தகவல் ஒன்றினை அடுத்து பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் காவல்துறையினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது ஆலா என்ற பறவையின் செல்லப்பெயர் கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் இயற்பெயருடைய இளைஞனை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட போது இளைஞனின் உடமையில் இருந்து 11 கிராம் 300 மில்லி கிராம் கஞ்சாவினை மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்று (05) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் சந்தேக நபரை வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஆலா என்ற பெயர் கொண்ட சந்தேக நபர் இரண்டாவது தடவையாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளமையும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (03) 22 வயதுடைய இளைஞன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.