இலங்கை
நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்த ஒன்றுகூடல் இன்று
நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்த ஒன்றுகூடல் இன்று
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஜேஎஸ்ஏ என்ற இலங்கை நீதிச் சேவை சங்கம், நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்து விவாதிப்பதற்காக விசேட பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டம் இன்று (30.06.2024) கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஜூன் 9 அன்று நீதி அமைச்சர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதத்தின் போது ஆற்றிய உரைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் உரையை கண்டித்தமைக்காக, ஜேஎஸ்ஏவின் முக்கிய அதிகாரிகளை நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஜேஎஸ்ஏயின் கருத்துக்கள் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாக குற்றம் சுமத்தியே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் பாதுகாப்பின் கீழ் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் நீதித்துறை அல்லது நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிடக்கூடாது என்று கோரியுள்ளது.