இலங்கை

‘போக்கிலி’.. ‘போக்கிலி’ என்று ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்ட சுமந்திரனும் மாவையும்!

Published

on

‘போக்கிலி’.. ‘போக்கிலி’ என்று ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்ட சுமந்திரனும் மாவையும்!

தமிழரசுக் கட்சி கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும் மாவை சேனாதிராஜாவும் ஒருவரை மாறி ஒருவர் ‘போக்கிலி’ ‘போக்கிலி’ என்று ‘பாராட்டிக்கொண்ட’ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கின்ற அந்தச் சம்பவம் பற்றி குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தமிழரசுகட்சி மத்தியகுழுக்கூட்டம் கடந்த (16.06.2024) வவுனியாவில் உள்ள தனியார் இல்லமொன்றில் மாவை சேனாதிராஜா தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.

அந்த கூட்டத்தில் சுமந்திரன், ஶ்ரீதரன் போன்றோரும், இருவருடைய ஆதரவாளர்களும், நடுநிலையான சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டம் ஆரம்பமான போதே ஏட்டிக்குப்போட்டியாக வார்தைப் பிரயோகங்கள் தாராளமாய் அரங்கேறின.

மாவை தனது தலைமை உரையில், “சுமந்திரன் என்னை பற்றி பச்சைப்பொய் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கடந்த ஜனவரி 21இல் நடந்த தமிழரசுகட்சி தலைவர் தெரிவில் பொதுச்சபையில் மேலதிகமாக 20 பேர் வாக்களிக்க சம்மதிக்காவிடில் தாம் தலைவர் தெரிவு தேர்தலை நடத்த விடமாட்டேன் என்று நான் சொன்னதாக அப்பட்டமான பச்சைப்பொய்யை சுமந்திரன் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி நீதிமன்றிலும் எழுத்துமூலமாக அதை கொடுத்திருக்கார். நான் அவ்வாறு கூறாதவற்றை ஏன் இப்படி சோடித்துச் செய்தார்?”என்று உரத்த குரலில் மாவையர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சுமந்திரன் துள்ளி எழுந்து குறுக்கிட்டு ‘நீங்கள் அப்படி கூறியது உண்மைதான். அப்படி நீங்கள் கூறும்போது சிறிதரனும், யோகேஷ்வரனும் இருந்ததார்கள் என்று சட்டமிட்டுக் கூறியதுடன், ‘உபவிதிக்கு மாறாக தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டதாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டுவிட்டு வெட்கம் இல்லாம் இன்னும் கதிரை பிடித்துக்கொண்டு தலைவராக இருக்கிறீர்.. இதைவிட போக்கிலித்தனம் இல்லை..’ என மேலும் சத்தமிட்டுக் கத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறிதரன் எழுந்து, ‘”சுமந்திரன் கூறுவது தவறு. அந்த இடத்தில் மாவை அண்ணர் அப்படி கூறவில்லை.. நானும் அப்பொழுது அங்கு இருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அப்போது மாவை சேனாதிராஜாவின் புதல்வன் கலையமுதன் குறுக்கிட்டு எழுந்து நின்று ‘கடந்த மகாநாடுகள், கட்சி நடவடிக்கைகள் எல்லாம் உபவிதிப்படியாகவா இவ்வளவு காலமும் நடந்தன? எல்லாமே தலைகீழாகத்தானே நடந்ததன? கடந்த 2019இல் மாநாடு அப்படித்தானே நடந்தது. அப்போதெல்லாம் உபவிதி மீறலாக தெரியல்லையா? தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதால் இப்பொழுது சுமந்திரன் இவ்வாறு கூறுகின்றார்.” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சுமந்திரன் மீண்டும் கோபம் கொண்டு “நீர் மத்தியகுழுவில் உறுப்பினர் இல்லை. நீர் கதைக்க முடியாது. வெளியில் போ.’ என்று சத்தமாகக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு கலையமுதன், ‘நான் மத்தியகுழுவில் இல்லை என்றால் எதற்காக எனக்கு அழைப்பு அனுப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பிவிட்டு, ‘சரி நான் வெளியேறுகிறேன்..’ என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிய முடிகின்றது.

அதற்கு மவை சேனாதிராஜா,”நான் அறுபது ஆண்டுகளாக தமிழரசுகட்சியில் இருக்கிறேன். இவ்வாறான போக்கிலி வேலை செய்பவர்களை இதுவரை கட்சியில் நான் காணவேயில்லை.” என்று கூறியுள்ளார்.

அதற்கு சுமந்திரன் “நான்போக்கிலியா?” ‘நான் போக்கிலியா” என்று பதிலுக்கு சத்தம் எழுப்பியதுடன் நான் எங்கே போக்கிலியாகச் செயற்பட்டேன்? நீர்தான் கட்சியில் போக்கிலித்தனமாக செயல்படுகிறீர்”’ என பதிலுக்குக் கூறியுள்ளார்.

பின்னர் மத்தியகுழுவை சேர்ந்த சிலர் இருவரையும் சமாதானப்படுத்தி ஓரளவு அமைதியை கூட்டத்தில் ஏற்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய பொதுசெயலாளர் சத்தியலிங்கம், ‘வழக்கை ஒருமுடிவுக்கு கொண்டுவரவே இந்த கூட்டம் கூட்டப்பட்டது. தயவு செய்து இருவரும் அமைதியாக இருங்கள்..’ என கூறி சமரசப்படுத்தியுள்ளார்.

அடுத்த விடயமாக வழக்கு சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டத்தணிகளான சுமந்திரன், மற்றும் தவராசா இருவரும் வழக்கு நிலைமைகளை இட்டு விளக்கம் கொடுத்ததுள்ளனர்.

அதன்பின்னர் ஜூலை19இல் வர இருக்கின்ற அடுத்த தவணையில் வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு என்ன செய்வது என்கின்றதான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும் ‘போக்கிலி’ என்பதன் அர்த்தம், போவதற்கு வேறு இடம் இல்லாதவன் என்பதே. அதாவது தமிழரசுக் கட்சியை விட்டு வேறு கட்சிகளுக்கு போகமுடியாதவர் என்பதுதான் அர்த்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியை விட்டு வெளியேறாதபடி, கட்சி மீது கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்துவதற்காகவே ‘போக்கிலி’ என்ற வார்தையை தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நாங்களும் உறுதியாக நம்புகின்றோம்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் இரண்டு நபர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version