இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது!

Published

on

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது!

எமது கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (15.06.2024) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“எமது கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்துமீறல்கள் இனிமேல் நடக்காது என்று இப்போது என்னால் உறுதியாக சொல்லவும் முடியாது.

இந்த பிரச்சினையை இராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்கத் தயாராக இருப்பதோடு அதற்கான முனைப்புகளிலேயே தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.

எமது ஜனாதிபதி இந்தியா சென்றபோது இரு நாட்டு கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். நான் அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்” என்றார்.

Exit mobile version