இலங்கை

இலங்கையில் வாடகை வருமான வரி

Published

on

இலங்கையில் வாடகை வருமான வரி

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறான வரியை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டளவில் இந்த வரி முறையை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி என்பது ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அவர் பெறும் வருமானத்தின் மதிப்பீடாகும்.

இந்த வரி வீட்டின் மதிப்பின் அடிப்படையில் அல்ல, ஆனால் அதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தின் அடிப்படையிலானதாகும்.

2025 ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராக இருந்த போதிலும், தற்போதுள்ள தடைகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாக, இந்த வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

குடியேறியுள்ள மற்றும் ஆளில்லாத வீடுகளுக்கு இந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சொத்து வரிக்கு ஏற்ற மாற்றாகும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபை மட்டத்தில் தரவுத்தளமொன்றை நிறுவுவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாட்டிலுள்ள சொத்து உரிமையாளர்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டை தரவுத்தளத்தில் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் தரவுத்தளத்தை உருவாக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version