இலங்கை

பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி மீட்பு

Published

on

பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி மீட்பு

மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் கடத்திச்செல்லப்பட்ட 14 வயதான சிறுமியொருவரை பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் இன்று (12) பொலிஸார் மீட்டுள்ளனர்.

புத்தல – கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றிற்கு கடந்த 9ம் திகதி வருகைத் தந்த மூன்று இளைஞர்கள், சிறுமியின் தந்தை மீது தாக்குதல் நடாத்தி சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறும் 20 வயதான இளைஞன் சிறுமியை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, புத்தல பகுதியிலுள்ள பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் வீட்டில் நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாதாள அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.

ஐந்து அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்ட இந்த அறை சிறுமியை மறைத்து வைக்கும் நோக்கில் ஒரு மாதத்திற்கு முன்பே நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version