இலங்கை

உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவது முக்கியம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Published

on

உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவது முக்கியம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் உரிய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய அதிகாரி, விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க (Anoja Theersinghe) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (06) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,2024ஆம் ஆண்டு இலங்கையில் 25 417 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டெங்குவைத் தடுப்பதற்கான மிக அடிப்படையான வழி, நுளம்பு பரவலைத் தடுப்பதாகும். அதற்கு வீடுகள், பாடசாலைகள், பணியிடங்களில் நுளம்புகள் உருவாகும் இடங்களை அகற்றுவது பொது மக்களின் பொறுப்பாகும்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டால், இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள வைத்தியரை அணுகி, உரிய ஆலோசனை பெற வேண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்த ‘பரசிட்டமோல்’ மாத்திரையை மாத்திரம் உட்கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதை டெங்கு நோயாகக் கருதுவது மிகவும் அவசியம்.

இந்த அறிகுறிகள் இருந்தால், முதலில் உடல் ரீதியாக ஓய்வெடுப்பது அவசியம். வலி ​​நிவாரணி அல்லது ‘பரசிட்டமோல்’ தவிர ஏனைய மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. மற்ற மருந்துகளை உட்கொள்வது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், முழுமையான இரத்த பரிசோதனை (FBC) செய்து, அரச வைத்தியசாலையில் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.அதன் பின்னர் தேவையிருப்பின் வைத்தியசாலைக்குச் செல்லலாம்.

இதற்கிடையில், நீர் மற்றும் கஞ்சி வகைகள், ஜீவனி, இளநீர் மற்றும் எலுமிச்சை போன்ற பானங்களைப் பருக வேண்டும். சிவப்பு நிறத்தில் அல்லது செயற்கை இரசாயனங்கள் கொண்ட பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.

வைத்திய ஆலோசனையைப் பின்பற்றினால் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவும், நிலைமையின் தீவிரத்தை குறைக்கவும் முடியும்.

குறிப்பாக, காய்ச்சல் குறைவதால் டெங்கு நோய் குணமாகிவிட்டதாக அர்த்தம் இல்லை. மிகவும் சிறிய குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பருமனானவர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனை பெறுவது முக்கியம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version