இந்தியா

இந்தியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூற டெல்லி செல்லும் ரணில்

Published

on

இந்தியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூற டெல்லி செல்லும் ரணில்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(09) இந்தியாவுக்கு (India) செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய தேர்தல் (India election) முடிவுகள் இன்று (04) வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் அதிபர் ரணிலின் டெல்லி (Delhi) விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிபரின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒன்றித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் புதிய பொருளாதார இணைப்புகளை துரிதப்படுத்தல் போன்றவற்றில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிபர் ரணில் டெல்லி செல்கின்றார்.

குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது.

அதிபர் ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போதும் கூட, எரிபொருள் தட்டுப்பாட்டை சீரமைக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது. மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியது.

அது மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கைக்காக இந்தியா ஒத்துழைப்பு கோரியது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது.

எனினும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று சுமார் ஒரு வருடத்தை கடந்த பின்னரே டெல்லி விஜயத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டு அதிபர் ரணிலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்திய தேர்தலில் வெற்றி பெறும் தலைவருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் அதிபர் ரணில் டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version