இலங்கை

ஊதிய முரண்பாடு பிரச்சினையை தீர்க்க தீர்மானம்

Published

on

ஊதிய முரண்பாடு பிரச்சினையை தீர்க்க தீர்மானம்

எதிர்வரும் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க விசேட அறிவும் அனுபவமும் கொண்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் திருப்திகரமான ஊழியர் குழுவை உருவாக்குவதற்கு மக்கள் சார்பாக எடுக்கப்பட்ட ஒரு முக்கிய தீர்மானமாக இதனை கருத முடியும். ஆகவே இது பொதுமக்களின் உரிமை ஆகும்.

அனைத்து விதமான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் போது அதிருப்தியடைந்த ஊழியர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் இறுதியில் ஒட்டுமொத்த பொதுமக்களையும் சங்கடப்படுத்தும்.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பல்வேறு சேவைப் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இடையில் உள்ள சம்பள முரண்பாடுகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதிகள் குறித்து நிதியமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

ஊதிய வேறுபாடு பிரச்சினைகளுக்கு முடிந்தவரை தீர்வு வழங்கும் போது ஒரு குழுவிற்கு வழங்கப்படும் தீர்வானது பல குழுக்களுக்கு புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.

இதுபோன்ற கடந்த கால அனுபவங்கள் ஏராளமாக உள்ளதால், ஊதிய வேறுபாடு பிரச்சினைகளுக்கு சாதகமான தேவையான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை நியமிக்க அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version