இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல்

Published

on

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 20000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரச சேவை தொழிற் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட நடவடிக்கையாக அரச, அரை அரச, தோட்ட மற்றும் மாணவர் சமூகங்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக சங்கத்தின் இணை அமைப்பாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நடவடிக்கையாக மாவட்ட மட்டத்தில் அரச நிறுவனங்களுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அதன் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச துறையில் வெற்றிடமாக உள்ள பணியிடங்களை நிரப்பாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், எனவே வெற்றிடமாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பவும், அரசு சொத்து விற்பனையை தடுக்கவும், கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கல்வியை விற்கும் திட்டங்களை இரத்து செய்யக் கோரி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச சேவையில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் கீழ்நிலை ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 20000 ரூபாவால் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கீழ்நிலையில் பணிபுரியும் அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளம் வாழ்வதற்கு போதவில்லை எனவும் சங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version